உலக கோப்பை கிரிக்கெட்: 34 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

  • editor1
  • 04 Jun 2019
  •   Comments Off on உலக கோப்பை கிரிக்கெட்: 34 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 7-வது லீக் ஆட்டம் நடைபெற்றது.


உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 7-வது லீக் ஆட்டம் நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக கருணாரத்னே மற்றும் குசல் பெரேரா களமிறங்கினர். இந்த ஜோடியின் பொறுப்பான ஆட்டம் அணிக்கு நல்ல தொடக்கமாக அமைந்தது. இந்த ஜோடியில் ஓரளவு ரன் சேர்த்த கருணாரத்னே 30 ரன்னில் கேட்ச் ஆனார். பின் களமிறங்கிய திரிமன்னே 25 ரன்னில் போல்ட் ஆக அவரை தொடர்ந்து ஒருபந்து இடைவெளியில் குசல் மென்டிஸ் 2 ரன்னிலும், மேத்யூஸ் ரன் எதுவும் எடுக்காமல் அடுத்தடுத்து முகமது நபியின் சுழலில் தங்களது விக்கெட்களை பறிகொடுத்தனர். பின்னர் களமிறங்கிய தனஞ்ஜெயா டிசில்வா ரன் எதுவும் எடுக்காமலும், திசரா பெரேரா 2 ரன்னிலும், இசுரு உதனா 10 ரன்னிலும், என அடுத்தடுத்து தங்களது விக்கெட்களை இழந்து நடையை கட்டினர். இருப்பினும் தொடக்க வீரராக களமிறங்கி தனது அரைசதத்தை பதிவு செய்த குசல் பெரேரா 78 ரன்னில் அவுட் ஆனார்.

33 ஓவர்கள் முடிந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் போட்டி 41 ஓவர்களாக குறைக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது. இறுதியில் இலங்கை அணி 36.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 201 ரன்களை எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக முகமது நபி 4 விக்கெட்களும், தவ்லத் ஜட்ரன் மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்களும், ஹமித் ஹசன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இருப்பினும் மழையின் காரணமாக, டக்வோர்த் லுயிஸ் முறையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 187 ரன்கள் (41 ஓவர்கள்) இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ஷஷாத், ஹசரத்துல்லா ஷஷாய் ஜோடியில், ஷஷாத் 7(12) ரன்களில் வெளியேற அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரஹ்மத் ஷா 2(11) ரன்களும், ஓரளவு ரன்கள் சேர்த்த ஹசரத்துல்லா ஷஷாய் 30(25) ரன்களும், ஹஸ்மத்துல்லா ஷாகிடி 4(17) ரன்களும், முகமது நபி 11(16) ரன்களும், கேப்டன் குல்பதின் நைப் 23(32) ரன்களும், ரஷித்கான் 2(4) ரன்களும், தவ்லத் ஜட்ரன் 6(18) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நஜிபுல்லா ஜட்ரன் 43(56) ரன்களில் ரன் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து ஹமித் ஹசன் 6(5) ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் முஜிப்-உர்-ரஹ்மான் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 32.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் சார்பில் அதிகபட்சமாக பிரதீப் 4 விக்கெட்டுகளும், மலிங்கா 3 விக்கெட்டுகளும், உடானா, திசாரா பெரேரா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது.