வெளிநாடுக்கு தப்பியவர்களின் 17 ஆயிரம் கோடி சொத்து பறிமுதல்

வங்கி கடன் மோசடியில் சிக்கி வெளிநாடுகளுக்கு தப்பி செல்வோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய கடந்த வார இறுதியில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இதன் அடிப்படையில் ரூ. 17 ஆயிரம் ேகாடி சொத்துக்களை விரைவில் பறிமுதல் செய்யப்பட இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தொழில் அதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி உள்ளிட்டோர் வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றனர். அவர்களை இந்தியா கொண்டுவர நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் வெளிநாட்டு நீதிமன்றங்கள் அவ்வளவு எளிதில் குற்றவாளிகளை ஒப்படைப்பதில்லை.

வெளிநாடுகளுக்கு தப்பி செல்லும் பொருளாதார மோசடி நபர்களின் இந்திய சொத்துக்களை பறிமுதல் செய்ய இந்திய சட்டங்களில் இதுவரை இடம் இல்லாமல் இருந்தது. இது தொடர்பாக புதிய சட்டமசோதா தயார் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக கடந்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் பல்வேறு காரணங்களால் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் பாகம் முழுமையாக வீணானது. இதனால் கடந்த வாரம் அவசர சட்டம் இயற்றப்பட்டது. இதற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். ஏற்கனவே விஜய் மல்லையாவின் ரூ.9 ஆயிரத்து 890 கோடி சொத்துகளையும், நிரவ் மோடியின் ரூ.7 ஆயிரத்து 664 கோடி சொத்துகளும் அமலாக்கத்துறையால் முடக்கி வைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் புதிய அவசர சட்டத்தின்படி விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி மட்டும் அல்லாமல் வங்கி கடன் மோசடி மற்றும் பண மோசடி செய்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பியவர்கள் மற்றும் இந்தியாவில் இருப்பவர்களின் ரூ.17 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட சொத்துகளை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கையை தொடங்கி உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.