தமிழ் பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்த பிரான்ஸ் வாலிபர்

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் நிக்கோலஸ் (35) அங்குள்ள கார் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த நிக்கோலஸ், அங்குள்ள விடுதியில் சில நாட்கள் தங்கி இருந்தார்.

அப்போது மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் கம்ப்யூட்டர் மையத்திற்கு ‘பிரவுசிங்’ செய்ய நிக்கோலஸ் அடிக்கடி சென்று வந்தார்.

அந்த கம்ப்யூட்டர் மையத்தில் மாமல்லபுரம் பூஞ்சேரியை சேர்ந்த சத்யா (22) என்ற பெண் வேலை பார்த்து வந்தார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இந்த திருமணத்திற்கு நிக்கோலசின் உறவினர்கள் மற்றும் சத்யாவின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து பூஞ்சேரியில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் நிக்கோலஸ்-சத்யா திருமணம் நேற்று இந்து முறைப்படி எளிமையாக நடந்தது.

பட்டு வேட்டி-சட்டை அணிந்த நிக்கோலஸ், சத்யாவின் கழுத்தில் தாலி கட்டினார். திருமண விழாவில் பங்கேற்க பிரான்ஸ் நாட்டில் இருந்து நிக்கோலசின் உறவினர்களும் வந்திருந்தனர்.

தமிழ் பெண்ணை திருமணம் செய்தது குறித்து நிக்கோலஸ் கூறியதாவது:

சத்யாவின் அமைதியான குணம் பிடித்ததாலேயே அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். தமிழ் கலாசாரம் எனக்கு பிடித்துள்ளது. 3 மாதங்களில் இருவரும் பிரான்ஸ் செல்ல உள்ளோம். இவ்வாறு கூறினார்.