அமெரிக்க ஆதரவு படையிடம் வீழ்ந்தது ஐ.எஸ் தலைநகரம்

இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) என்று அழைத்துக் கொள்ளும் குழுவின் தலைநகராக இருந்த சிரியாவின் ரக்கா நகர் அமெரிக்க ஆதரவு படையினர் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அந்த நகரில் தற்போது ஒருசில ஐ.எஸ் போராளிகளே எஞ்சியுள்ளனர். ஐ.எஸ் பொது இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் அல் நயீம் சதுக்கத்தை சிரிய ஜனநாயக படை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் அந்த நகர் கைப்பற்றப்பட்டதாக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக எட்டப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய உள்ளுர் ஐ.எஸ் போராளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ரக்கா நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். வெளிநாட்டு போராளிகள் வெளியேறுவதை அனுமதிக்கவில்லை என்று சிரிய ஜனநாயக படை கூறியது.

அண்மைய தினங்களில் 3,000க்கும் அதிகமான பொதுமக்கள் நகரில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

2014ஆம் ஆண்டில் ஐ.எஸ் கைப்பற்றிய முதலாவது மிகப் பெரிய நகர் ரக்கா என்பதோடு அது கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த குழுவின் வசம் இருந்தது. இந்நிலையில் குர்திஷ் மற்றும் அரபு போராளிகளை ஒன்றிணைத்த அமெரிக்க ஆதரவு சிரிய ஜனநாயக படை கடந்த நான்கு மாதங்களாக இந்த நகரை தனது முற்றுகையில் வைத்திருந்தது.

எனினும் நகர மருத்துவமனை மற்றும் அரங்கு ஆகியவற்றில் சுமார் 50 ஐ.எஸ் போராளிகள் எஞ்சி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தற்போது அந்த நகரில் வான் தாக்குதல்கள் தணிந்திருக்கும் நிலையில் அழிவடைந்த வீதிகளில் ரோந்து செல்லும் சிரிய ஜனநாயக படை ஒலிபெருக்கு ஊடே மக்களை வெளியே வந்து உணவு அறுந்துபடி அழைப்பு விடுக்கின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் சிரியா மற்றும் ஈராக்கில் வேகமாக பின்னடைவை சந்தித்து வரும் ஐ.எஸ் குழுவுக்கு ரக்கா நகர் பறிபோனது பெரும் இழப்பாக உள்ளது.