ஓய்வு குறித்து முடிவு… யுவராஜ் சிங் சொல்கிறார்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி உலக கோப்பை போட்டித் தொடருக்குப் பின்னர் ஓய்வு பெறுவது குறித்து முடிவு செய்வேன் என்று ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் யுவராஜ் சிங், இது குறித்து நேற்று கூறியதாவது: சர்வதேச கிரிக்கெட் மட்டுமல்ல, எந்த வகையான போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவது குறித்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கு பின்பே முடிவு செய்வேன். புத்தாயிரமாண்டு தொடக்கத்தில் இருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறேன். எனவே நிச்சயமாக அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவதில் உறுதியான முடிவை எடுப்பேன்.
ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. அற்புதமான வீரர்களுடன் எங்கள் அணி மிக வலுவாக அமைந்துள்ளது.

லீக் சுற்றில் முதல் நான்கு இடங்களுக்குள் வருவதே இப்போதைய இலக்கு. அதன் பிறகே கோப்பையை வெல்வது பற்றி யோசிக்க முடியும். தொடக்க வீரர் கிறிஸ் கேல் அபாரமாக விளையாடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எப்போதுமே அவர் எனக்கு நல்ல நண்பர் தான். உலகிலேயே மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேன். களத்தில் அவரது ஆளுமை பிரமிப்பானது. தற்போது அவர் நல்ல பார்மில் இருப்பது எங்கள் அணிக்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது. டி20 கிரிக்கெட்டில் எதையும் கணிப்பது கடினம். நடப்பு சீசனில் சென்னை, கொல்கத்தா அணிகளை வீழ்த்துவது கடும் சவாலாக இருக்கும் என நினைக்கிறேன். இவ்வாறு யுவராஜ் கூறியுள்ளார்.