புதிய சாதனையை படைத்துள்ளது இலங்கை அணி.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட 20 தொடரின்பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் மூலமாக இலங்கை அணி ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது.

இப் போட்டியில் இலங்கை அணியை வழிநடத்தும் திஷர பெரேரா மூலமாகவே இந்த சாதனைபடைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் அனைத்துவகையான போட்டிகளிலும் சேர்த்து இலங்கை அணிக்கு மொத்தமாக ஏழுதலைவர்கள் செயல்பட்டுள்ளனர்.

இரு சர்வதேச அணிக்கு ஒரே ஆண்டில் அதிகப்படியான தலைவர்கள் செயல்பட்டதே குறித்த சாதனையாகும்.மத்தியூஸ் ,ஹேரத் ,சந்திமால் ,தரங்க,கப்புகெதர,மாலிங்க ஆகியோரை தொடர்ந்து தலைவராகசெயல்படும் சந்தர்ப்பம் திஷர பெரேராவுக்கும் கிட்டியுள்ளது..2011 ம் ஆண்டில் சிம்பாவே மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு ஆறு தலைவர்கள் செயல்பட்டமையேஇதுவரையான சாதனையாகும்.

அத்தோடு ரி20 போட்டிகளில் இலங்கை அணியை வழிநடத்தும் 9 வது தலைவர் (மஹேல, டில்ஷான்,சங்கக்கார, கண்டம்பி, மத்தியூஸ், சந்திமால், மாலிங்க, தரங்க, திஷர) எனும் பெருமையும் பெரேராவுக்கு கிடைத்துள்ளது.

முதலாவது ரி-20 போட்டியில் இலங்கை அணியினை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கும் பாகிஸ்தான், மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் 1-0 என முன்னிலை அடைந்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான ரி-20 போட்டிகளுக்காக விஷேடமாக அறிவிக்கப்பட்டிருந்த இலங்கை அணியில் இந்தப் போட்டிக்காக நீண்ட காலத்தின் பின்னர் துடுப்பாட்ட வீரர் மஹேல உடவத்த அழைக்கப்பட்டிருந்ததோடு, இளம் துடுப்பாட்ட வீரரான சதீர சமரவிக்ரமவும் தனது கன்னி ரி-20 போட்டியில் விளையாடும் வாய்ப்பினை பெற்றிருந்தார்.

தொடர்ந்து நாணயச் சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக தமது துடுப்பாட்டத்தினை ஆரம்ப வீரர்களான தனுஷ்க குணத்திலக்க மற்றும் தில்ஷான் முனவீர ஆகியோருடன் தொடங்கிய இலங்கை அணிக்கு போட்டியின் மூன்றாவது பந்திலேயே இமாத் வஸீம் அதிர்ச்சியளித்தார். இதனால் இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக போல்ட் செய்யப்பட்ட தில்ஷான் முனவீர ஓட்டமேதுமின்றி மைதானத்திலிருந்து நடந்தார்.

மோசமான ஆரம்பத்தினை இலங்கை பெற்றிருப்பினும் அதனை கருத்திற்கொள்ளாது அதிரடியாக ஆடிய தனுஷ்க குணத்திலக்க அணியின் ஓட்டங்களை விரைவாக அதிகரித்திருத்தார். எனினும் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் உஸ்மான் கானினால் அவரது இன்னிங்ஸ் 18 ஓட்டங்களுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இலங்கை அணியின் மத்தியவரிசை பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களால் மிகவும் நெருக்கடிக்குள்ளாகியது. மஹேல உடவத்த, சஜித் பத்திரன, தசுன் சானக்க ஆகிய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தனர். இதனால் ஒரு கட்டத்தில் இலங்கை அணி 68 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து மிகவும் இக்கட்டான நிலைக்கு சென்றது. இந்நிலையில் களமிறங்கிய அணித் தலைவர் திசர பெரேராவும் இலங்கை அணிக்கு கைகொடுக்கவில்லை.

எனினும், இறுதியில் போராட்டத்தினை காட்டிய சீக்குகே பிரசன்னவினால் சரிவில் இருந்து சற்று மீண்டு கொண்ட இலங்கை அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 102 ஓட்டங்களினைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக சீக்குகே பிரசன்ன 2 சிக்ஸர்கள் அடங்கலாக 23 ஓட்டங்களினைப் பெற்று ஆட்டமிழக்காது நின்றிருந்ததோடு சதீர சமரவிக்ரமவும் அதே ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றிருந்தார்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் வலதுகை வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை சாய்த்திருந்ததோடு மொஹமட் ஹபீஸ் மற்றும் உஸ்மான் கான் ஆகியோரும் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

தொடர்ந்து, இலகு வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 103 ஓட்டங்களைப் பெற பதிலுக்கு ஆடிய பாகிஸ்தான் அணி, ஆரம்பத்தில் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை பறிகொடுத்து ஒரு தடுமாற்றத்தினை காண்பித்திருப்பினும் சொஹைப் மலிக்கின் சிறப்பாட்டத்தினால் வெற்றி இலக்கினை 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அடைந்தது. பாகிஸ்தானின் துடுப்பாட்டத்தில் அவ்வணியினை வெற்றிப்பாதையில் வழிநடாத்திய அனுபவ வீரர் சொஹைப் மலிக் மொத்தமாக 31 பந்துகளில் 4 பெளண்டரிகள் அடங்கலாக 42 ஓட்டங்களினைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்ததோடு, முன்னாள் தலைவர் மொஹமட் ஹபீசும் 25 ஓட்டங்களுடன் அணிக்கு வலுச்சேர்த்திருந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளரான விக்கும் சஞ்சய 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.