மண்முனை தென் எருவில் பற்று கோட்டக்கல்வி அலுவலகத்தை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

பல வருடமாக களுவாஞ்சிக்குடி பொலிசாரினால் பயன்படுத்தப்படும் மண்முனை தென்எருவில் பற்று கோட்டக்கல்வி அலுவலகத்தினை தமது அலுவலக பாவனைக்கு பெற்றுத்தருமாறு மண்முனை தென் எருவில் பற்று கோட்ட அதிபர்கள் அரச அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அரச அதிபருக்கு அனைத்து பாடசாலை அதிபர்களும் ஒப்பம் இட்டு கடிதம் அனுப்பியுள்ளனர். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில் மேற்படி கோட்டக்கல்வி அலுவலகம் பல வருடங்களாக களுவாஞ்சிக்குடி பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிசாரினால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. எமது கல்வி நடவடிக்கைகளுக்கு கோட்டக்கல்வி அலுவலகமானது மிகவும் அத்தியாவசியமானது. இவ்வலுவலகம் இடமின்மையால் நடமாடும் அலுவலகமாக உள்ளது. இந்நிலையில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகளின் கல்வித் தேவைகள் தொடர்பான தகவல்களை அதிபர்கள் உரிய முறையில் உரிய நேரத்திற்கு கோட்டக்கல்வி அலுவலகத்தின் ஊடாக வழங்குவதில் தாமதம் ஏற்படுகின்றது. இதனால் பாடசாலை மற்றும் மாணவர்களின் கல்வித் தேவைகளை உரிய நேரத்தில் செயற்படுத்த முடியாமலுள்ளது. அத்துடன் ஆசிரியர் மத்திய நிலையமும் பட்டிப்பளை பொலிசாரினால் பயன்படுத்தப்படுவதால் அந்நிலையமும் செயற்படமுடியாமலுள்ளது.

எனவே பொலிசாரினால் பாவிக்கப்பட்ட கட்டடங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வரும் இந்நிலையில் எமது வலயத்திற்குரிய மேற்படி கோட்டக்கல்வி அலுவலகத்தினை பெற்றுத்தரும் பட்சத்தில், கோட்டக்கல்வி அலுவலகம், ஆசிரியர் மத்திய நிலையம் இரண்டினையும் இக்கட்டடத்தில் பயன்படுத்த முடியும். எனவே இவ்வலுவலகத்தைப் பெற்றுத்தருமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.