15வருடங்களுக்கு பின்னர் வழங்கப்பட்ட காணி உறுதி –பிரதேச செயலாளருக்கு நன்றி கூறும் மக்கள்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் சுனாமி அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்து திராய்மடு பகுதியில் குடியேற்றப்பட்டுள்ளவர்களுக்கான காணி உறுதிகள் 15வருடங்களுக்கு பின்னர் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

சுனாமி அனர்த்ததின்போது மட்டக்களப்பு நாவலடி பகுதியில் இருந்தவர்கள் திராய்மடு பகுதியில் வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்டு குடியேற்றப்பட்டனர்.

எனினும் இதுவரை காலமும் அவர்களுக்கான காணி உறுதிகள் வழங்கப்படாத நிலையிலேயே இருந்துவந்தது.

இந்த நிலையில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் குறித்த பகுதியில் உள்ளவர்களுக்கான காணி உறுதிகள் வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றார்.

இதன்கீழ் 150பேருக்கான காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு (13.05.2019) மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி த.பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

குறித்த தமது காணிகளுக்கான உறுதியை 15வருடங்களுக்கு பின்னர் பெற்றுக்கொடுத்த பிரதேச செயலாளருக்கு மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.