அம்பாறையில் காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு

(டினேஸ்)

காணாமலாக்கப்பட்டோருக்கான கிளை அலுவலகம் அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பாறையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இந்த ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணியின் தலைமையில் திருக்கோவில் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

மேலும், இந்தப் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பலர் கலந்துகொண்டனர்.

இறுதிக்கட்ட யுத்தத்திற்கு முன்னரும் யுத்தத்தின்போதும் யுத்தத்திற்கு பின்னரும் இலங்கை இராணுவத்தினரால் பலர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டனர்.

காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி வடக்கு கிழக்கில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் காணாமலாக்கப்பட்டவர்களை கண்டறிவதற்கு வடக்கு, கிழக்கு தெற்கு உட்பட நாட்டில் 8 பிராந்திய அலுவலகங்களை அமைப்பதற்கு காணாமல்போனோர் பணியகம் திட்டமிட்டுள்ளதை கண்டித்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.