எமது மக்கள் பிரதிநிதிகளின் நாடகப்போக்கு இளைஞர்களாகிய எமக்கு அதிருப்தியையும் மனவேதனையும் ஏற்படுத்துகின்றது... (மறத்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் - வே.அன்பழகன்)

தேர்தல் நேரங்களில் மட்டும் மக்களில் இருக்கும் அபிலாசைகளைக் காட்டுவதும் மக்கள் மீது அன்பு காட்டுவதுமான ஒரு நாடகப் போக்கை எமது மக்கள் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக மேற்கொள்வது இளைஞர்களாகிய எமக்கு அதிருப்தியையும் மனவேதனையும் ஏற்படுத்தி இன்று இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துள்ளது என மறத்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வே.அன்பழகன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வவுணதீவு, நாவற்காடு பிரதேசத்தில் இன்றைய தினம் மறத்தமிழர் கட்சியின் அங்குரார்ப்பன நிகழ்வின் ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதுவரை காலமும் எமது மக்கள் வாக்களித்துத் தேர்வு செய்த அரசியல் பிரதிநிதிகள் எமது மக்களின் நிலைமைகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாதது கவலைக்குரிய விடயம். எமது இந்தப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில் சகல வளங்களும் இங்கே கொட்டிக் கிடக்கின்றன. இங்கிருக்கின்ற வளங்களை வைத்துக் கொண்டு வளம் சார்ந்த தொழிற்சாலைகளை அமைத்து எங்களுடைய இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும். அப்படி இருக்கும் பட்சத்தில் எமது அரசியல் தலைமைகள் வீதிகள், விளக்குகள் போடுவதைக் கூடச் சரியாகச் செய்யாமல் அவர்களது சுயநலம் சார்ந்தே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இன்று எமது நாட்டில் பரவலாகப் பொது அமைப்புக்களின் உருவாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. எமது மக்களால் வாக்களித்து தெரிவு செய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் மக்களுக்கானவர்களாக மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியவர்களாக இருந்திருந்தால் இவ்வாறான பொது அமைப்புக்கள் தேவையற்றதாக இருந்திருக்கும்.
இன்றயை காலச் சூழலில் எங்களுடைய இளைஞர்கள் வாழும் வயதில் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து மத்திய கிழக்கு நாடுகளில் குறைந்த சம்பளங்களுக்கு உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். தேர்தல் நேரங்களில் மட்டும் மக்களில் இருக்கும் அபிலாசைகளைக் காட்டுவதும் மக்கள் மீது அன்பு காட்டுவதுமான ஒரு நாடகப் போக்கை எமது மக்கள் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக மேற்கொள்வது இளைஞர்களாகிய எமக்கு அதிருப்தியையும் மனவேதனையும் ஏற்படுத்தி இன்று இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துள்ளது.
எமது மக்களுக்காக எமது வளங்களை வைத்துக் கொண்டு வளம் சார்ந்த தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள், அபிவிருத்திகள் என மறத்தமிழர் கட்சியினராகிய எமது அரசியல் தொடர்ந்து நீளும் அதற்கு எமது மக்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது மக்களை சரியாகப் பயன்படுத்தி எமது வளங்களை வைத்துக் கொண்டு ஒரு முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லவில்லை. எமது நாட்டின் முதுகெலும்பாகக் காணப்படும் இந்த விவசாயத் தொழில் ஒன்றே போதும் எமது மக்களை வளம்சார்ந்த மக்களாக மாற்றுவதற்கு அதற்கான எவ்வித முயற்சிகளையும் அவர்கள் மேற்கொள்ளாமல் மழுங்கடிப்புச் செய்ய முற்படுவது எமக்கு வேதனையாக இருக்கின்றது. இருப்பினும், உரிமை சார்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் அனைத்து விடயங்களுக்கும் வெளியில் இருந்து எமது ஆதரவினை வழங்குவோம்.

இத்தனை காலமும் எமது மக்கள் ஒட்டுமொத்த வாக்குகளைத் தமிழத் தேசியக் கூட்டமைப்பு வழங்கி ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியையும் வழங்கினர். அந்தப் பதவியை நீத்துப் போகச் செய்ததைத் தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்த சாதனை என்னவென்றே தெரியவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வைத்துக் கொண்டே எதனையும் சாதிக்க முடியாதவர்கள் இனிவரும் தேர்தல்களில் வாக்குகள் சிதைக்கப்படாமல் அவர்களுக்கே ஒட்டுமொத்த வாக்குகளை மீண்டும் வழங்குவதன் மூலம் அவர்கள் மக்களுக்காக செயற்படுவார்கள் என்ற நம்பிக்கையை அவர்களிடம் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்.
இதற்கு முன்னர் இருந்த தலைமைகள் சரியான தேர்வுகளை மேற்கொள்ளாமல் இந்த இடத்திற்கு எங்களைக் கொண்டு விட்டமையினால் நாளைய தலைமுறைகள் எம்மைப் பார்த்துத் தூற்றக் கூடாது என்ற நோக்கத்தைக் கொண்டே நாங்கள் செயற்படுகின்றோம். எமது எதிர்காலச் சந்ததிக்காகப் பாடுபட்டு உழகை;க வேண்டும். எமது கலை கலாச்சாரப் பண்பாடு அத்தனையும் காக்கப்பட வேண்டும்.
மறத்தமிழர் கட்சி ஒருபோதும் எவருடனும் இணைந்து செயற்பட மாட்டாது. தேர்தல்களிலும் தனித்தே போட்டியிடும். அடுத்து வரும் எந்தத் தேர்தலாக இருந்தாலும் எமது கட்சி போட்டியிடும் இதனைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியான பாதையில் இல்லை. அவர்கள் தற்போது அவர்களின் கொள்கையில் இருந்து மாறியே செயற்படுகின்றனர். அதற்காக உரிமையை விட அபிவிருத்தி முக்கியம் என்பது எமது எண்ணம் அல்ல. தற்போதைக்கு மக்களை வறுமைப் பிடியில் இருந்து உயர்த்த வேண்டும். அவர்களுக்குரிய வாழ்வாதாரங்கள் தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.