அமைச்சுப் பதவி கிடைக்காவிட்டால் நீதிமன்றினை நாடுவோம்: சுஜீவ சேனசிங்க

அமைச்சரவை அந்தஸ்த்துடைய அமைச்சுக்களை நியமிப்பதில் எழுந்துள்ள குழப்பநிலைக்கு உரிய தீர்வுகள் கிடைக்காவிட்டால் நீதிமன்றினையே நாடுவோம் என விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையமான சிறிகொத்தாவில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அமைச்சுக்களை நியமிப்பதில் காணப்படும் குழப்பநிலைக்கு உரிய தரப்பினர் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபடுவதன் மூலமே தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இல்லாவிட்டால் இந்தக் குழப்பமான சூழ்நிலையினைத் தீர்ப்பதற்கு நீதிமன்றத்தின் தீர்ப்பினைப் பெற்றுக்கொள்ளும் நிலைபாட்டில் ஐக்கிய தேசிய கட்சி உள்ளது.

நாட்டினது அபிவிருத்தியினை கருத்திற்கொண்டு அமைச்சுக்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள முடியும்.

ஆனால் அரசாங்கத்தின் செலவுகளைக் குறைக்க வேண்டுமானால் அமைச்சுக்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதே சிறந்தது” என அமைச்சர் சுஜீவ சேனசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.