இரண்டாவது நாளாகவும் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

வெள்ளைக்கொடியுடன் இரணைதீவுக்கு சென்ற மக்கள், அங்கு இரண்டாவது நாளாகவும் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

நேற்று (திங்கட்கிழமை) சுமார் 360 பேர் மீன்பிடி வள்ளங்களில் இரணைதீவுக்கு சென்றவர்களில், சுமார் 100இற்கும் மேற்பட்டோர் இரணைதீவில் அமைந்துள்ள இரணைமாதா தேவாலயத்தில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் குறித்த தேவாலயத்தில் தங்கியுள்ள மக்கள், தமக்கான உணவுகளை தயாரித்து உண்டு தங்களது போராட்டத்தினை அமைதியான முறையில் முன்னெடுத்துவருகின்றனர்.

இதேவேளை தாம் அங்கு செல்லும்போது கடற்படையினர் எதிர்ப்பு தெரிவிப்பர் என எண்ணியிருந்தபோதிலும், தமக்கு கடற்கடையினரால் எவ்வித எதிர்ப்புக்களும் காண்பிக்கப்படவில்லை என மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இரணைதீவில் தங்கியுள்ள மக்களின் குறைகளை கேட்டறிய இதுவரை அரசாங்க அதிபரோ, வேறு அதிகாரிகளோ நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை இரவு வேளையில் தங்கியிருந்தவர்களில் அதிகமானவர்கள் பெண்களாக உள்ளமையால் அவர்களிற்கான அடிப்படை தேவைகள் பல உள்ள நிலையில் அவர்கள் அங்கு தங்கியுள்ளனர்.