கல்முனை மாநகர சபை மேயராக சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், பிரதி மேயர் கணேஸ்

அம்பாறை மாவட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கல்முனை மாகரசபையின் முதல் அமர்வு இன்று (02) திங்கட்கிழமை பி.ப 2.30 மணிக்கு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம். சலீம் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத்திற்கான மேயர், பிரதிமேயர் தெரிவு என்பது மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

அந்த வகையில் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்தெரிவு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இம்முறை இச்சபைக்கு 09 கட்சிகளும் 06 சுயேச்சைகளும் நியமனப்பத்திரத்தைத் தாக்கல் செய்தன. இருந்தும் 02 சுயேச்சை அணிகளின் நியமனப்பத்திரம் நிராகரிக்கப்பட்டன. எனவே 9 கட்சிகளும் 04 சுயேச்சைகளும் போட்டியிட்டன.
அந்த வகையில் மேயர் பதவிக்கு சட்டத்தரணி ஏ.எம். றகீப் மற்றும் த.தே.கூட்டமைப்பு சார்பில் குலசேகரம் மகேந்திரனது பெயரும் பரிந்துரைக்கப்பட்டது. இருவருக்குமான. தெரிவு திறந்தவெளி வாக்கெடுப்பில் விடப்பட்டபோது ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து தெரிவான ஏ. எம். றகீப் 27 வாக்குகளைப் பெற்று கல்முனை மாநகரசபையின் மேயராக தெரிவு செய்யப்பட்டார் அவருடன் போட்டியிட்ட குலசேகரம் மகேந்திரன் 07 வாக்குகளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பிரதி மேயர் பதவிக்கு 03 பேரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டது. அந்த வகையில் அ.இ. மக்கள் காங்கிரஸின் முபீத், த.தே.கூட்டமைப்பின் கே.சிவலிங்கம், தமிழர் விடுதலைக்கூட்டணியின் காத்தமுத்து கணேஸ் ஆகிய மூன்று கட்சிகளிலும் இருந்து உறுப்பினர்கள் பிரேரிக்கப்பட்டார்கள்
வாக்கெடுப்பில் கணேஸ் 15 வாக்குகளையும் சிவலிங்கம், முபீத் ஆகியோர் தலா 07 வாக்குகளையும் பெற்றனர்.