தபால் மூல வாக்களிப்பு ஜனவரி 25, 26 இல்

வேட்புமனு கோரப்பட்டுள்ள 341 உள்ளூராட்சி சபைகளுக்குமான தபால் மூல வாக்களிப்பு, எதிர்வரும் ஜனவரி மாதம் 25, 26ஆம் திகதிகளில் இடம்பெறும் என, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பித்திருந்த அரச சேவையிலுள்ள ஊழியர்களின் பெயர்ப் பட்டியல், எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி உறுதிப்படுத்தப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.

அதற்கமைய தகுதியுடைய அரச உத்தியோகத்தர்களுக்கு தபால் மூலம் தங்களது வாக்குகளை பதிவு செய்வதற்கு அவசியமான வாக்கு அட்டைகள் உள்ளடங்கிய பொதிகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் ஜனவரி 11 ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

தபால் மூல வாக்களிப்புக்காக, சுமார் 3 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில், அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தெரிவத்தாட்சி அலுவலர்களுடன் இரு வெவ்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாகவும், இதில் உள்ளூராட்சி சபை தேர்தல் மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது.