தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்கு பெப்ரவரி 07 வரை காலக்கெடு

உள்ளுராட்சி சபை தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

இன்று (26) ஊடக நிறுவனங்களுடன் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்தார்.

உள்ளுராட்சி சபை தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதோடு, அது தொடர்பான, குறித்த விடயங்கள் உள்ளடக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இன்று வெளியிடவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த 09 ஆம் திகதி முதல் இன்று (26) வரையான காலப்பகுதியில், 22 தேர்தல் முறைப்பாடுகள் மற்றும் 09 விதி மீறல்கள் உள்ளிட்ட 31 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, இன்று (26) வரை, தமக்கு 84 தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.