நாட்டைச்சூழ இன்றும் மழைக்கான காலநிலை

நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை, அம்பாந்தோட்டை மாவட்டங்களில் மழை பெய்யும் சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (21) பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.

வளிமண்டலத்தில் நிலவும் உயர் - தாழ் மாறுபடும் குழப்பநிலை காரணமாக இன்று (21) மலையகத்தின் கிழக்கு பகுதிகளில் பாரிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊவா, கிழக்கு மாகாணங்களிலும், நுவரெலியா, மாத்தளை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடற்பகுதியில் இடைக்கிடை மழை அல்லது இடியுடனான மழை பெய்யலாம். ஏனைய கடற்பிரதேசங்களில் பிற்பகல் அல்லது இரவு நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதிகளில் மணிக்கு 30 - 40 கிலோ மீற்றர் வேகத்தில் தென்மேற்கு நோக்கி காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரை மற்றும் காலியிலிருந்து மாத்தறை ஊடாக அம்பாந்தோட்டை வரையான ஆழ் கடல் மற்றும் ஆழமற்ற கடற் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 - 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் எனவும், கடல் நாட்டின் தென் மற்றும் தென்கிழக்கு பகுதிகளின் ஆழமான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால் கடற்றொழிலாளர்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கோரிக்கை விடுத்துள்ளார்.