காலை உணவில் தினமும் ஒரு முட்டை சேர்த்துக்கொண்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்

மூன்று வேளை உணவு நேரங்களில் தவிர்க்கக் கூடாதது காலை உணவு என்பதை வைத்தியர்கள் வலியுறுத்துகிறார்கள்.

அதிலும் காலை உணவானது அன்றைய நாள் முழுவதற்குமான உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும், ஆரோக்கியத்தையும், தருகின்ற முழுமையான ஊட்டச்சத்தைக் கொண்டிருக்க வேண்டியது இன்றியமையாதது.

இவ்வாறான முழுமையான ஊட்டச்சத்தைக் கொண்டிருக்கும் உணவுகளை நிறையுணவு என்கின்றோம். பொதுவாக நிறையுணவு என்றால் அதில் பால் மற்றும் முட்டை ஆகிய இரண்டும் முதலிடத்தைப் பிடித்துக்கொள்கின்றன. இவை எமது காலை ஆகாரத்தில் பிரதானமாகச் சேர்ந்திருக்கவேண்டியது அவசியம். இந்த நிலையில், காலை உணவில் தினமும் ஒரு முட்டை சேர்த்துக்கொண்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என ஒரு பார்வை.....

புரதச்சத்து: ஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் 06 கிராம் இருக்கிறது.

விட்டமின் D: முட்டை மஞ்சள் கருவில் விட்டமின் D உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும்.
ஆன்டிஓக்ஸிடன்ட்: இதிலிருக்கும் லூடின் (Lutein) மற்றும் சியாங்தின் கண் நோய்கள் வராமல், கண் புரை ஏற்படாமல் தடுக்கும்.

உடல் எடையைக் குறைப்பதற்கும் எதுவாக இருப்பதால், நம் அன்றாட உணவில் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம்..
"முட்டை நல்ல உணவல்ல" என்று தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (The American Heart Association - AHA) அறிவித்தது. முட்டை மஞ்சள் கருவிலிருக்கும் அதிகபட்சக் கொழுப்பால் இதய நோய்கள் வரக்கூடும் என்று அதற்குக் காரணமும் சொல்லப்பட்டது. ஆனால், பிறகு வந்த ஆராய்ச்சிகளோ, அப்படி எந்த ஆபத்தும் முட்டையினால் ஏற்படாது என்றன. வாரம் ஆறு முட்டைகளைச் சாப்பிடுபவர்களின் ரத்த அளவு ஒரே நிலையில்தான் இருக்கும் என்பதும் கண்டறியப்பட்டது.

தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் ஆராச்சியின்படி, சாதாரண மனிதன் ஒருவனுக்கு தினமும் 300 மில்லி கிராம் வரை கொழுப்புச்சத்து தேவை என்கிறது. அந்தளவில் 62 சதவிகிதம் வரை ஒரு முட்டை ஈடுகட்டுகிறது. நம் உடலுக்குக் கெட்ட கொழுப்புகளால்தான் பிரச்சனை ஏற்படும். ஆனால், முட்டையிலோ நல்ல கொழுப்புகள்தான் நிறைந்துள்ளன. அதனால் உடல் ஆரோக்கியத்திற்கு எந்த விதமான தீங்குகளும் ஏற்படாதெனவும் கூறப்படுகின்றது.

உடலுக்குத் தேவையான கொழுப்பின் அளவு ஒவ்வொருவர் உடல்வாகுக்கு ஏற்ப மாறுபடும். உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள், கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள் ஒரு நாளைக்கு முட்டையின் ஆறு வெள்ளைக் கருவையும் இரண்டு மஞ்சள் கருவையும் கொண்ட உணவுகளைச் சாப்பிடலாம். இதனால் சதைகள் நன்கு வலுப்பெறும். உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்கள் நாள் ஒன்றுக்கு ஒன்று என்ற விதத்தில் முட்டை சாப்பிட்டாலே போதும். மற்ற உணவுகளில் இருந்தும் கொழுப்புச்சத்துகள் கிடைப்பதால், இதனை அவரவர் தேவைக்கேற்பதான் சாப்பிட வேண்டும்.

சர்க்கரைநோய் இருப்பவர்கள் முட்டை சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு இதனால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

முட்டையுடன் கோதுமை மாவினால் தயாரிக்கப்பட்ட பாண் மற்றும் காய்கறிகள்தான் சத்தான கூட்டணி. இறைச்சி, சீஸ், வெள்ளைப்பாண் ஆகியவற்றை இதனுடன் சாப்பிடும்போது சுவையாகத்தான் இருக்கும். ஆனால், முட்டையுடன் கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது சிறந்ததல்ல. முட்டை வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட்டாலே போதுமானது. மஞ்சள் கருவை நீக்கிய அவித்த முட்டையாகவும் சாப்பிடலாம். ஆரோக்கியமான இதயத்துக்கு தரமான புரதச்சத்தும் அவசியம். எனவே, முட்டை சாப்பிடுவதை நிறுத்த வேண்டாம். தினமும் ஒரு முட்டை, நல்ல உணவு, முறையான உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கை உறுதி.