நட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்

தமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட விருப்பங்கள் சுவாரஸ்யமானவை. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துவைத்துக் கொள்ள எப்போதும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது உண்டு. நம்முடைய நட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும், என்ன கார் ஓட்டுகிறார்கள் என்று சின்ன புலனாய்வு செய்தோம்.

ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டாரின் போயஸ் கார்டன் வீட்டு போர்டிகோவை ‘ஆடி’ உட்பட பல வகை கார்கள் அலங்கரிக்கின்றன. சமீபகாலமாக பி.எம்.டபிள்யூ காரில்தான் பயணிக்கிறார். முன்பெல்லாம் ‘பிரீமியர் பத்மினி’ வகை காரை அவரே ஓட்டிச் செல்வதை சென்னைவாசிகள் ஆச்சரியமாக பார்ப்பார்கள். இருந்தாலும் ரஜினிக்கு எப்போதுமே ஆல்டைம் ஃபேவரைட் ‘அம்பாசிடர்’ தானாம்.

கமல்ஹாசன்

லேட்டஸ்ட் ரக கார்களைப் பயன்படுத்துவது உலகநாயகனின் ஹாபி. ‘கன்னிப் பொண்ணா நினைச்சு காரைத் தொடணும்’ என்று பாட்டு பாடினவர் ஆயிற்றே? கமல், பயன்படுத்தாத காரே இல்லை எனலாம். சமீபமாக ‘ஆடி ஏ8 செடான்’ ரக காரில்தான் கமல் பயணிக்கிறார்.

விஜய்

இளைய தளபதி தீவிரமான கார் பிரியர். முதல் படமான ‘நாளைய தீர்ப்பு’ வெளிவந்த காலத்திலிருந்தே சொகுசு கார்களில் ஆர்வம். கொஞ்ச தூரம்தான் பயணிக்க வேண்டுமென்றால் மினி கூப்பரை அவரே ஓட்டிச் செல்கிறார். யாரேனும் விஐபிகளைச் சந்திக்கவேண்டுமென்றால் ரோல்ஸ் ராய்ஸில் சென்று கம்பீரமாக இறங்குவார். ‘பேண்டம்’ வகையைச் சார்ந்த இந்தக் காரின் விலை ஐந்து கோடியாக இருக்குமென்கிறார் நம்ம ஆழ்வார்பேட்டை மெக்கானிக் ஒருவர்.

விஜய்சேதுபதி

மக்கள் செல்வன், நீண்டகாலமாக ‘இன்னோவா’தான் பயன்படுத்திக் கொண்டிருந்தார். சமீபத்தில்தான் ‘பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ்’க்கு மாறியிருக்கிறார். இந்தக் காரின் விலை கோடியைத் தாண்டும்.

சிவகார்த்திகேயன்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எளிமையாக டூவீலரில் பயணித்துக் கொண்டிருந்தவர், இப்போது கம்பீரமாக ‘ரேஞ்ச் ரோவர்’ காரில் வந்து இறங்குகிறார். “டூ வீலரில் வலம் வரத்தான் ஆசை. ரோட்டில் அடையாளம் கண்டுபிடிச்சிட்டு செல்ஃபீ எடுத்துக்க கூட்டமா வர்றாங்க. நம்மாலே டிராஃபிக் ஜாம் ஆயிடக்கூடாது பாருங்க” என்று செல்லமாக அலுத்துக் கொள்கிறார்.

தனுஷ்

‘ஆடி’ கார் என்றால் தென்இந்தியாவின் ப்ரூஸ்லீக்கு உயிர். இப்போது அதில்தான் பயணிக்கிறார். டிரெண்டுக்கு ஏற்ற மாதிரி கார்களை மாற்றிக்கொண்டே இருப்பார். செடான் ரக கார்களை வாங்கிக் குவித்திருக்கிறார். ஃபேவரைட் கலர் கருப்பு என்பதால், இவரது கார்களின் நிறமும் பொதுவாக கருப்பாகத்தான் இருக்கும்.

சூர்யா

சிவகுமாருடைய தி.நகர் இல்லத்தின் முற்றத்தில் ‘பென்ஸ்’, ‘பி.எம்.டபிள்யூ’, ‘ஆடி’ என்று சொகுசு கார்கள் வரிசையாக நிற்கின்றன. எனினும் சிங்கம் ஹீரோவுக்கும், அவருடைய ரியல் லைஃப் ஹீரோயின் ஜோதிகாவுக்கும் ‘பென்ஸ்’தான் ஃபேவரைட்டாம்.

ஆர்.கே.சுரேஷ்

இன்டர்நேஷனல் கார்களை வாங்கிக் குவிப்பது இவரது ஹாபி. ‘பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ்’, ‘மினி கூப்பர்’ என்று ஏராளமான கார்களை வைத்திருக்கிறார்.

சரண்யா பொன்வண்ணன்

‘இன்னோவா’தான் இவருடைய ஆல்டைம் பேவரைட். படப்பிடிப்புக்காக செல்லும்போது இந்தக் காரில் தான் பயணம். விலையுர்ந்த கார்களை சினிமா கம்பெனிகள் பயன்படுத்த கொடுத்தாலும், ‘இன்னோவா’வில் தான் பயணம் செய்வதை விரும்புவாராம்.

ஆர்.கே. & ஹாரிஸ் ஜெயராஜ்

ஸ்போர்ட்ஸ் மாடலான வெள்ளை நிற ‘லம்போகினி’ கார் வைத்திருக்கிறார். இதே ரகம், இதே கலர் வைத்திருக்கும் மற்றொரு பிரபலம் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். லிட்டருக்கு ஓரிரு கிலோ மீட்டர் மட்டுமே மைலேஜ் கொடுக்கும் இந்தக் காரின் ஒருமுறை சர்வீஸ் செலவிலேயே ஒரு ‘மாருதி’ வாங்கிவிடலாமாம். ஹாரிஸ் ஜெயராஜ் அதிகமாக இந்தக் காரை பயன்படுத்துவதில்லை. மாதம் ஒருமுறைதான் இந்தக் காரை வெளியே எடுக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.

விஷால்

ஜாகுவார் உள்பட ஏராளமான விலையுர்ந்த கார்களை பயன்படுத்துகிறார் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால்.

சந்தானம்

நீண்டகாலம் ‘மாருதி ஸ்விப்ட்’ பயன்படுத்திய சந்தானம், இப்போது ‘ரேஞ்ச் ரோவர் எவாக்யூ’ வைத்திருக்கிறார்.

ஆர்யா

டேக் இட் ஈஸி பர்சனாலிட்டியான ஆர்யா ‘மினி கூப்பர்’ வைத்திருக்கிறார். ஈசிஆர் சாலையில் எங்காவது ‘மினி கூப்பர்’ ஓடினாலே, அது ஆர்யாதான் என்று அடித்துச் சொல்லலாம்.

கஞ்சா கருப்பு

‘டொயோட்டா பார்ச்சூனர்’ பயன்படுத்துகிறார். “கார் எதுவா இருந்தா என்னங்க... நாம ஏறி உட்கார்ந்ததும் போனா போதும்” என்று வெள்ளந்தியாகச் சொல்கிறார்.

இயக்குநர் பாலா

டார்க் மூவி டார்லிங்கான பாலாவுக்கு பிடித்த கலர் கருப்புதான். பதிவு எண் 5 கொண்ட கருப்புநிற ‘பென்ஸ்’ பயன்படுத்துகிறார்.

இயக்குநர் ஷங்கர்

காரைவிட காரின் நம்பர் ப்ளேட்டுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார். தன்னுடய எல்லா கார்களுக்கும் 8 ரெஜிஸ்ட்ரேஷன் நெம்பர் வாங்கி வைத்திருக்கும் ஷங்கர் வீட்டின் ராஜா ‘ரோல்ஸ் ராய்ஸ்’.

இயக்குநர் வெற்றிமாறன்

இங்கிலீஷிலேயே வெற்றிக்கு பிடிக்காத வார்த்தை டிரைவர். எவ்வளவு தூரமாக இருந்தாலும் அவரேதான் கார் ஓட்டிச் செல்வார். இப்போது ‘பி.எம்.டபிள்யூ’ ஓட்டுகிறார்.

இயக்குநர் லிங்குசாமி

சென்னைக்கு ‘ரேஞ்ச் ரோவர்’ எப்போது அறிமுகமானதோ, அப்போதிலிருந்தே அதைத்தான் பயன்படுத்துகிறார் லிங்கு.

ஜி.வி.பிரகாஷ்

‘ஜாகுவார்’, ‘மினி கூப்பர்’ என்று ஏராளமான கார்களை வைத்திருக்கிறார்.

அஜித்குமார்

கார் என்றாலே இவரது பெயர்தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும். எந்த கம்பெனி, என்ன விலையென்றெல்லாம் எந்த பாகுபாடுமில்லாமல் டூவீலர், கார்களைப் பயன்படுத்துவார். திடீரென ‘மாருதி-800’ல் கூட இவரைப் பார்க்கலாம். படப்பிடிப்புத் தளங்களில் யாரிடமிருந்தாவது ‘டிவிஎஸ் எக்ஸெல்’ மொபெட் வாங்கிக்கூட ஜாலியாக ஓட்டுவார். குடும்ப சகிதம் எங்காவது நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது ‘பென்ஸ்’ காரில் இவரைப் பார்க்கலாம். செல்ஃப் டிரைவிங் செய்வதுதான் அஜித்துக்குப் பிடிக்கும்.

யுவன் ஷங்கர் ராஜா

இவர் என்ன கார் பயன்படுத்துகிறார் என்பது சமீபத்தில் அவரது கார் திருடு போன சம்பவத்தின் மூலம் உலகுக்கே தெரிந்துவிட்டதால், நாம் என்ன புதுசாக புலனாய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டியிருக்கு?