தாத்தா ஆன வடிவேலு

நடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி பாணியை கையாண்டு நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்களில் நடிக்க முடிவு செய்தார். அக்கதைகளும் நகைச்சுவை பின்னணியில் அமைக்கப்பட்டது. இம்சை அரசன் 23ம் புலிகேசி, தெனாலிராமன், எலி போன்ற படங்களில் அவர் கதாநாயகனாக நடித்தார். பின்னர் பல்வேறு காரணங்களால் படங்களில் நடிக்காமல் சிலகாலம் ஒதுங்கி இருந்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு விஷால் நடித்த கத்திசண்டை படத்தில் மீண்டும் நகைச்சுவை வேடம் ஏற்றார். இதையடுத்து சிம்புதேவன் இயக்க ஷங்கர் தயாரிக்கும் இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். பட தரப்பினருடன் ஏற்பட்ட பிரச்னையையடுத்து அப்படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார். இதையடுத்து வடிவேலு மீது பட தரப்பினர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர்.

வடிவேலுவின் மகளுக்கு சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. ஆடம்பரமாக அல்லாமல் ஊர் பக்கத்தில் உறவினர்கள் முன்னிலையில் திருமண விழாவை நடத்தினார் வடிவேலு. தற்போது அவரது மகளுக்கு ஆண், பெண் என இரட்டை குழந்தை பிறந்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியை கொண்டாடும்விதமாக சொந்த ஊரில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுக்கு விருந்து அளித்தார் வடிவேலு.