மைதியாகவிருந்த ரஜினியை குழப்பியதே ஊடகங்கள்தான்!

ஆங்கிலம் கலந்து பேசும் தமிழ் மண்ணின் மைந்தன். சப்பாணிகளுக்கும் மயில்களுக்கும் திரையில் இடம்பிடித்துக் கொடுத்தவர். முதல் மரியாதையும் செய்யத் தெரியும், சிகப்பு ரோஜாக்களும் செய்யத் தெரியும் இரு துருவப் படைப்பாளி. ரஜினி, கமலை அழைத்து விழாவும் நடத்துவார். அவர்களின் அரசியலை விமர்சனமும் செய்வார். வயதுகளைத் தாண்டி படைப்புகளைத் தொடர்ந்து கொண்டே இருக்கும் இயக்குனர் பாரதிராஜா கூறும் கருத்துகள் இவை:

தமிழ் சினிமாவின் இரும்புக் கதவுகளை திறந்து வச்சது நீங்க. கிராமத்தின் யதார்த்த மனிதர்களை, திரையில் பிரம்மாண்டமாக அடையாளப்படுத்தியவர் நீங்க. உங்கள் பார்வையில் இன்றைய சினிமா எப்படி இருக்கிறது?

இரும்புக் கோட்டையை நான் திறந்தேனு இல்ல, எனக்கு முன்னாடியே திறந்துட்டு வந்தாங்க, அன்னைக்கு இருந்த காலகட்டத்துல ஒரு சாமானியனும் உள்ள வரலாம் அப்டிங்குறதுக்கு, நான் உதாரணமா இருந்தேன். பெரிய அகாடெமிக் குவாலிஃபிகேஷன் கிடையாது.

சாதாரண விவசாய குடும்பத்துல பிறந்த ஆளு, எந்த பின்னணியும் இல்லாம வந்து உள்ள நொழைஞ்சுட்டானே, அது சக்ஸஸ் ஆச்சு. சிலருக்கு அது முன்னுதாரணமா இருந்து எல்லாரும் உள்ள வரும்போது நான் ஒடச்சேன், ஓடச்சேனு சொல்றாங்க. இது டிஜிட்டல் காலம், உலகம் ரொம்ப சுருங்கிருச்சு எல்லாத்தையும் கைல வச்சுருக்கான், எத கேட்டாலும் மூணு நிமிஷத்துல சொல்லுறான்.

அர்ஜென்டினால ஒரு கம்பெனி பேர் கேட்டா சொல்றான், இப்போ லேட்டஸ்டா ஒரு படம் ​ெஹாலிவுட்ல வந்துருக்காமே அது என்னனு கேட்டா, உடனே தட்டி பாத்து சார் ஃபெயிலியர், சக்சஸ்னு சொல்றான். எல்லாமே கைல இருக்கு. நாங்கல்லாம் தேடிப்போய்தான் படம் பாப்போம், டெல்லி போயி ஒரு நல்ல ஃபெஸ்டிவல் போயி ஒரு நல்லபடம் பாக்கணும்ங்குறது எல்லாமே இப்போ கைலயே இருக்கு, உலகம் சுருங்கிருச்சு.

அதனால இவன் உலக சினிமாக்களோட போட்டி போடணும். இப்போ ஒலிம்பிக்கு தங்கப்பதக்கம் வாங்குற மாதிரி தமிழ் சினிமாவுலயும் நல்லா வாங்கிட்டு வந்தாங்கனு சொல்ற மாதிரி படம் பிரிப்பர் பண்ணனும். அந்த சூழ்நிலை இங்க வரணும்.

சமூக மரபுகளை உடைக்கிற பல விஷயங்களை உங்கப்படம் பேசியிருக்கு. மதங்களை தூக்கி எரியுற 'அலைகள் ஓய்வதில்லை' க்ளைமேக்ஸ் காட்சியே அதற்கு சாட்சி. நிகழ்கால சினிமாவுல இப்படியான விஷயங்கள் பேச முடியும்னு நினைக்கிறீர்களா?

நான் பேசிய காலங்கள்ங்குறது வேற... அலைகள் ஓய்வதில்லை நான் இப்போ எடுக்க முடியாது.

ஒருவேள அலைகள் ஓய்வதில்லை படம் இப்போ எடுத்திருந்த மிகப்பெரிய பிரச்சனை கிளம்பியிருக்கும், வேதம் புதிது இப்போ நான் எடுத்திருந்தால் 'தேவர்ங்குறது நீ படுச்சு வாங்குன பட்டமா?'னு இப்ப எடுக்கமுடியாது. 'ஜாதிய ஒழிக்கணும், ஜாதிய ஒழிக்கணும்'னு சொல்லி மதசார்பற்ற நாடுனு பேசிட்டு,

இன்னும் மதத்த அதிகமா வளத்து, ஜாதிய வளத்துட்டு இருக்கோம். அலைகள் ஓய்வதில்லை இப்போ எடுத்தா எல்லாரும் வரிஞ்சு கட்டிட்டு வருவாங்க.

இன்னைக்கு நான் பூணூல் அறுத்திருந்தா, கிராஸ் அறுத்திருந்தா என்ன ஆகும்? மைக்க நீங்க கொண்டு போயிருப்பிங்க.. 'அவர் பூணூல் அறுத்ததை பற்றி என்ன நினைக்கிறீர்கள், கிராஸ் அறுத்ததை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' அப்டினு கேப்பிங்க. அவன் அதுக்கு எதாவது சொல்லுவான். பெரிய பிரச்சனை வரும்.

அட்டக்கத்தினு சொல்லப்பட்ட எம்.ஜி.ஆர். தானே தமிழகத்துல தொடர்ந்து ஆட்சியை பிடிச்சாரு?

அன்னைக்கு இவ்ளோ விழிப்புணர்ச்சி இல்ல. இன்னைக்கு நமக்கு இவ்ளோ விழிப்புணர்ச்சி இருந்தே நாம இப்போ இப்படித்தான் இருக்கோம். அதுவுமில்லாம தனிப்பட்ட முறையில் எம்.ஜி.ஆர் நல்ல மனுஷன். He loves people. அவர் மேடை போட்டு தையல் மெஷின்லாம் கொடுக்கல.

அவர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம படப்பிடிப்பு தளத்துலயே யாராவது வேடிக்கை பாக்க வந்தாங்கனா, அந்த கிராமத்துக்கு போயி ஆயிரம் சேலைகள் வாங்கிக்குடுத்துட்டு வந்துருவாரு. 'இவுங்கள்ட்ட இருந்து வந்த காசு இவுங்கள்ட்டயே போகட்டும்' அப்டின்னுவாரு. அந்த மனிதாபிமானம் வார்த்த இருந்துச்சு, அவரோட பொலிடிகல் பாலிசி வேற.