ரஜினி, பிரபு, கமலை அழைக்க வேண்டும்:

சிவாஜி நினைவு மணி மண்டபத்தினை பெயருக்கு நடத்தாமல், மாபெரும் விழாவாக நடத்தி அதில் ரஜினி, கமல், சிவாஜி குடும்பத்தினர் மற்றும் நடிகர் சங்க தலைவர்களையும் அழைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகத்தின் தலைச் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனது நினைவு மணி மண்டபத்தினை தமிழக அரசு நடிகர் சங்கத்தோடு இணைந்து மாபெரும் சிறப்பான விழாவாக சிவாஜி கணேசனுக்கு பெருமையும், புகழும் சேர்க்கும் விதத்தில் நடத்திட வேண்டும். தமிழக முதலமைச்சர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகர் சங்கத் தலைவர்கள் மற்றும் சிவாஜி கணேசன் குடும்பத்தினர் உட்பட அனைவரையும் அழைத்து இவ்விழா நடத்தப்பட வேண்டும்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் செவாலியே விருது பெற்றதற்கு அன்றைய முதல்வர் செல்வி ஜெயலலிதா சிறப்பான விழாவினை நடத்தினார்.

இப்போது அவரது திருவுருவச் சிலை மற்றும் நினைவு மணி மண்டப திறப்பு விழாவினை பெயருக்கு நடத்தாமல் அமரர் சிவாஜி கணேசனு க்கு பெருமை சேர்க்கும் விதத்தில் விழாவினை நடத்திட வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழக அரசையும், நடிகர் சங்க நிர்வாகிகளையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.