ஷாப்பிங்மாலில் சண்டை போட்ட ஸ்ருதிஹாசன்

சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற, ஒரு தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழாவில் நடனம் ஆடினார் ஸ்ருதிஹாசன். அந்நிகழ்ச்சிக்காக முந்தைய தினம் ஒத்திகை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டார் கமலின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன். ஒத்திகையில் கலந்து கொண்டுவிட்டு அருகில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்ற ஸ்ருதிஹாசன், அங்கிருந்த அழகுசாதன கடைக்குள் நுழைந்திருக்கிறார். ஸ்ருதியைக் கண்டதும் உற்சாகமான அழகுசாதன கடை ஊழியர்கள் அவரை அன்போடு வரவேற்றுள்ளனர்.

ஷோகேஸில் உள்ள ஒவ்வொரு பொருட்களையும் எடுக்கச் சொல்லி இருக்கிறார் ஸ்ருதிஹாசன். அவர் கேட்டதை எல்லாம் எடுத்துக் கொடுத்திருக்கின்றனர் ஊழியர்கள். ஒவ்வொரு பொருட்களையும் பார்த்துவிட்டு வாங்காமல் திருப்பிக் கொடுத்திருக்கிறார். இப்படியாக கடையில் உள்ள பெரும்பாலான பொருட்களை எடுக்கச்சொல்வதும், வாங்கிப் பார்த்துவிட்டு வேண்டாம் என திருப்பிக்கொடுப்பதுமாகவே இருந்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

இவர் வாங்க வரவில்லை...சும்மா டைம்பாஸுக்கு வந்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்ட ஊழியர்கள், அதன் பிறகு அவர் கேட்ட பொருட்களை எல்லாம் இல்லை..ஸ்டாக் இல்லை என்று சொல்லி இருக்கின்றனர். பொருட்களை வைத்துக்கொண்டே இல்லை என்று சொல்கிறார்கள் என்பதை புரிந்து கொண்ட ஸ்ருதிஹாசன் கடும் ஆத்திரமடைந்திருக்கிறார். அப்புறமென்ன? கடை ஊழியர்களை திட்டித்தீர்த்திருக்கிறார். அவர் போட்ட சத்தத்தில் ஷாப்பிங்மாலில் பெருங்கூட்டமே கூடிவிட்டதாம்.