விவாகரத்து முறையும் இருந்ததற்கு ஆதாரம் 4000 ஆண்டுகளுக்கு முன்பே வாடகைத்தாய் நடைமுறை

அங்காரா : நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி புரிந்தவர்கள் வாடகைத் தாயை பயன்படுத்தி குழந்தை பெற்றதுடன், விவாகரத்து முறையை பின்பற்றியதும் தெரிய வந்துள்ளது. துருக்கியில் தொல்லியல் துறை அருங்காட்சியகத்தில் கல்வெட்டு ஒன்று உள்ளது. இதில் துருக்கி பகுதியில் உள்ள மத்திய அனடோலியாவை ஆண்ட அசிரிய அரசர்கள் 4,000 ஆண்டுகளுக்கு முன்பே வாடகைத் தாய் முறையை பின்பற்றி இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக மகளிர் நோய் தொடர்பான ஆன்லைன் இதழ் கடந்த அக்டோபர் 26ம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பழங்காலத்திலேயே மலட்டுத்தன்மை மக்களுக்கு இருந்துள்ளது. அதை தவிர்த்து வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றதும், அசிரிய படிவம் மூலம் தெரியவந்துள்ளது. மத்திய அனடோலியா நாட்டை சேர்ந்த அரசர் லாகிபிம். இவர் எனிசுரு என்பவரது மகளை மணந்தார். அவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை. இதனால் அரசியே தனது கணவருக்கு ஒரு அடிமை பெண்ணை விலைக்கு வாங்கினார். அவர்கள் இணைந்து குழந்தை பெற்றதும் அந்த அடிமை பெண்ணை விரட்டியடித்தார். இதற்காக அந்த பெண்ணுடன் அரசர் ஒப்பந்தம் செய்து கொண்டதற்கான ஆதாரமும் உள்ளது.

குழந்தை இல்லாததால் அரசனும் அரசியும் விவாகரத்து பெறவும் முயன்றனர். இதற்காக விவாகரத்து பெற விரும்புபவர் தனது இணைக்கு 5 வெள்ளிகாசுகளை நிவாரணமாக வழங்க வேண்டும் எனவும் அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது. இதே போல் எகிப்திலும் குழந்தை பெறுவதற்காக இருவரிடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. அதன்படி, சரா என்ற பெண் தனது வயது மூப்பு காரணமாக குழந்தை பெற்றுத்தர முடியாத நிலை இருந்தது. இதையடுத்து, எகிப்து அடிமையான ஹகார் என்ற இளம் பெண்ணுடன் தனது கணவர் அபிரகாம் இணைந்து குழந்தை பெற அனுமதித்தார். இதன் மூலம் ஹகார் வாடகைத்தாயாக செயல்பட்டுள்ளார்.